திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அருகே உள்ள கிராமத்தில் 13 வயதுச் சிறுமி, 7ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15ஆம் தேதி அன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்று விட்டதால், பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

வேலைக்குச்சென்ற பெற்றோர் மாலையில் வீடு திரும்பியபோது, மகள் இறந்து கிடப்பதை கண்டு அழுது புரண்டனர். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது, சிறுமியின் கையில் மின்சார வயர் இருந்ததைக் கண்டு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் அங்கு சென்ற வடமதுரை போலீசார், சிறுமியின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடற்கூறாய்வு, அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள், குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தினால் விசாரணையைத் தீவிரப்படுத்தினர் போலீசார். விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவன் சிக்கினான். அவனை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.