திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தேன்மொழிசேகர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக தமிழக வனத்துறை அமைச்சரும் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு தலைவருமான திண்டுக்கல் சீனிவாசன் நிலக்கோட்டை, கொடைரோடு, அம்மையநாயக்கனூர், நாகையகவுண்டன்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, ராஜதானி கோட்டை, பொன்னம்பட்டி, தர்மபுரி, அம்மாபட்டி பகுதிகளில் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கும், மாம்பழ சின்னத்திற்கும் வாக்குகள் சேகரித்தார்.
வாக்காள மக்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ... நிலக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் தேன்மொழி சேகருக்கு இரட்டை இலை சின்னத்திலும், திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழ சின்னத்திலும் வாக்களியுங்கள். நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தேன்மொழிசேகர் உங்களுக்கு நன்கு பரிச்சயமானவர். ஏற்கனவே இப்பகுதி மக்களின் குறைகளை தீர்த்து வைத்தவர். இவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிப்பதின் மூலம் நீங்கள் எளிதாக அரசின் நலத்திட்ட உதவிகளை பெறலாம்.
கிராமங்கள்தோறும் சிறப்பாக அரசு திட்டங்களை செயல்படுத்துவார் என்றார். பாராளுமன்ற தொகுதியில் மாம்பழ சின்னத்தில் போட்டியிடும் பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து விவசாய குடும்பத்தைச் சேர்ந்த விவசாயிகளின் கஷ்டங்களை உணர்ந்தவர். அவருக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் விவசாயிகளின் குறைகளை தீர்த்துவைப்பார் என்றார். மேலும் அவர், அரசின் சாதனைகளை சொன்னாலே அமோக வெற்றி பெறலாம் என்றார்.
தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், மாவட்ட கழகசெயலாளர் வி.மருதராஜ், திண்டுக்கல் எம்.பி. உதயகுமார், ஒன்றிய செயலாளர் யாகப்பன், பேரூர் கழக செயலாளர்கள் சேகர், தண்டபாணி, நிலக்கோட்டை வீட்டு வசதி கடன் சங்க தலைவர் நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.