தமிழக அரசின் துறை சார்ந்த உத்தரவுகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை 'டிஜிட்டல் கையெழுத்து' கொண்டு வெளியிடக் கோரிய வழக்கில், 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய- மாநில அரசுகள் மற்றும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2000- ஆம் ஆண்டு மத்திய தகவல் தொழில்நுட்பச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, மத்திய- மாநில அரசுகளில் பல்வேறு துறைகள் கணினிமயமாக்கப்பட்டன. அதன்படி, மத்திய- மாநில அரசுகளில், பல்வேறு துறைகள் வெளியிடும் உத்தரவுகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், 'டிஜிட்டல் கையெழுத்து' முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் செயல்படும் பல்வேறு அரசுத் துறைகளின் உத்தரவுகள் மற்றும் நீதிமன்ற உத்தரவுகளை 'டிஜிட்டல் கையெழுத்து' கொண்டு வெளியிட உத்தரவிடக்கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பழனிவேல் ராஜன் என்பவர்,சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தற்போது அரசு வேலை வாய்ப்புக்கு ஆன்லைன் முலமாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கும்போது, விண்ணப்பதாரரின் கையெழுத்து இல்லாமல் அனுப்பப்படுவதால், இதில் முறைகேடுகள் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் கையெழுத்து முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதன்மூலம், அரசு ஆவணங்கள் மற்றும் அரசின் உத்தரவுகளில் முறைகேடுகள் செய்து திருத்தப்படுவதைத் தடுக்க முடியும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்க மத்திய- மாநில அரசுகள் மற்றும் உயர்நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டனர்.