'தமிழக வெற்றிக் கழகம்' எனும் கட்சியை நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் நிலையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக நடிகர் விஜய் அறிவித்திருந்தார். இந்நிலையில் தேர்தல் நேரத்தில் நடிகர் விஜய் சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்வது போன்ற புகைப்படம் ஒன்று வெளியானது.
நடிகர் விஜய்க்கு கொரட்டூரில் இருக்கும் தன்னுடைய சொந்த நிலத்தில் அவருடைய அம்மாவிற்காக 'சாய்பாபா மந்திர்' என்ற கோவிலை கட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயினுடைய கட்சியின் முக்கிய நிர்வாகியான புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய் சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்வது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். அதேபோல சென்னை கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோவில் ஒன்றுக்கு நடிகர் விஜயின் தாய் ஷோபனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் கும்பாபிஷேகம் செய்து வைக்கும் வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வைரல் ஆகியிருந்தது.
விஜய் சாய்பாபா கோயிலில் இருக்கும் புகைப்படம் வெளியான நிலையில், அது வெளி மாநிலத்தில் இருக்கும் சாய்பாபா கோவில் என கூறப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது அது கொரட்டூரில் உள்ள சாய்பாபா கோவில் என தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய்க்கு சொந்தமாக சாலிகிராமத்தில் இருக்கும் ஷோபா திருமண மண்டபம் உள்ள இடத்தில் முதலில் கோவில் கட்ட ஏற்பாடு செய்ததாகவும், ஆனால் அங்கு போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் அந்த முடிவு மாற்றப்பட்டு கொரட்டூரில் அவருக்கு சொந்தமாக உள்ள 8 கிரவுண்ட் நிலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் புஸ்ஸி ஆனந்தின் அந்த பதிவு சர்ச்சைகளை ஏற்படுத்த தற்போது சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட அந்த புகைப்படத்தை புஸ்ஸி ஆனந்த் நீக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே நடிகர் விஜய் கட்சி அறிவிப்பின் போது அவரது புகைப்படத்தில் நெற்றியில் குங்குமம் வைக்கப்பட்டிருந்தது பல்வேறு அரசியல் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.