
மத்திய அரசு, கேஸ் விலையை உயர்த்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பெண்கள் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் மாவட்ட மாதர் சங்கங்கள் இணைந்து மத்திய அரசு கடந்த 15 நாட்களில் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் வரை உயர்த்தியுள்ளது.
ஒவ்வொரு குடும்பங்களிலும் இந்த குறைவான காலத்தில் கிடைக்கக்கூடிய சொற்பமான சம்பளங்களை வைத்து வாழ்க்கையை ஓட்டி வரும் நிலையில், இந்த விலை உயர்வு வெகுவாக பல குடும்பங்களை பாதித்து வருவதாகவும் மத்திய அரசு இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக இந்த விலை உயர்வை திரும்பப்பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக மத்திய அரசு இந்த வேளாண் சட்டங்களைக் கண்டிப்பாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்களை முன்வைத்தனர். மாதர் சங்க ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பு தருவதற்காக வந்திருந்த பெரம்பலூர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாதர் சங்கங்கள் போராடிக்கொண்டிருக்கும் போது “ஃபோட்டோ எல்லாம் புடிச்சாச்சு, வீடியோ எல்லாம் எடுத்தாச்சு கிளம்புங்க” என்று சொன்னார். இதனைக்கேட்ட மாதர் சங்கத்தினர் “கேஸ் விலையால் நாங்க எவ்வளவு கஷ்டபட்றோம், ஃபோட்டோ எல்லாம் புடிச்சாச்சுனு கிண்டல் பண்றீங்க” என வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து டி.எஸ்.பி. கார்த்திகேயன், “உங்க கண்டனத்த பதிவு பண்ணியாச்சு என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்” என்று விளக்கம் கொடுத்த பிறகு மாதர் சங்கத்தினர் சமாதானம் அடைந்து கைதாகினர்.