தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் முதலமைச்சர் கோப்பை இலச்சினை வெளியிட்டு விழா சென்னை லீலா பேலஸில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய சென்னை அணியின் கேப்டன் தோனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்களை வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தோனி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள எல்லோரையும் போல நானும் எம்.எஸ். தோனியின் மிகப் பெரிய ரசிகன். சமீபத்தில், தோனியின் பேட்டிங்கை பார்க்க வேண்டும் என்பதற்காகவே இரண்டு முறை சேப்பாக்கம் சென்றேன்.
தமிழ்நாட்டின் வளர்ப்பு மகன் தோனி, தொடர்ந்து சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என நம்புகிறேன். எளிமையான பின்னணியில் இருந்து வந்த தோனி, தனது கடின உழைப்பால் தேசிய அடையாளமாக மாறினார். கோடிக்கணக்கான இந்திய இளைஞர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக உள்ளார். அதனால்தான் இந்த முயற்சியின் தூதராக இன்று அவர் இங்கே இருக்கிறார். கிரிக்கெட்டில் மட்டுமின்றி, அனைத்து விளையாட்டுகளிலும் நமது தமிழகத்தில் இருந்து இன்னும் பல தோனிகளை உருவாக்க விரும்புகிறோம்” என்றார்.