தர்மபுரி அருகே, அரசாங்க வேலையை எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்ற பேராசையால் கிராம மக்கள் ஒரு கோடி ரூபாயை ஏமாந்திருப்பதும், இந்த மோசடி தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருக்கும், சம்பவங்களும் அரங்கேறி இருக்கின்றன.
தர்மபுரி மாவட்டம் பச்சினம்பட்டியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் கோபால். மாற்றுத்திறனாளியான இவர் எம்.ஏ., பி.எட்., படித்துள்ளார்.
அரசு வேலைக்காக முயற்சி செய்து வரும் கோபால், டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுகளை தொடர்ந்து எழுதி வருகிறார். அதன்படி, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, டிஎன்பிஎஸ்சி குரூப்- 1 தேர்வை, சென்னையில் எழுதியுள்ளார். அவர் தேர்வு எழுதிய சில நாள்கள் கழித்து, பர்கூர் அருகே உள்ள மல்லப்பாடியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் கோபாலின் தந்தையைத் தேடி வந்தார்.
அப்போது அவர், ''குரூப்-1 தேர்வு எழுதியுள்ள கோபால் டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டில் கண்டிப்பாக அரசு வேலை வாங்கித் தருகிறேன். அதற்கான ஆட்கள் எல்லாம் என் கைவசம் இருக்கிறார்கள்,'' என்று ஆசை வலை விரித்துள்ளார். இதற்காக 30 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியதுடன், முன்பணமாக 3 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். அதன்பின் கோவிந்தராஜ் வேலை வாங்கித் தராமல் கம்பி நீட்டினார்.
இதற்கிடையே, அவர் இதுபோல் பலரிடம் அரசாங்க உத்தியோகம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறித்திருப்பது கோபாலின் தந்தை தேவராஜூக்கு தெரிய வந்ததை அடுத்து கடும் ஆத்திரம் அடைந்தார். அவரை பல இடங்களில் தேடி வந்துள்ளார்.
இந்நிலையில்தான், செவ்வாய்க்கிழமை (பிப். 4) மாலையில், கோவிந்தராஜ் மற்றும் அவருடன் இன்னும் மூன்று பேரும் சேர்ந்து கொண்டு, கடத்தூரில் சிலரிடம் அரசாங்க உத்தியோகம் வாங்கித் தருவதாக பேசிக் கொண்டிருப்பது குறித்து தேவராஜூக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரும், அவரைப்போல் பணம் கொடுத்து ஏமாந்த சிலரும் கடத்தூர் விரைந்து சென்று கோவிந்தராஜை சுற்றி வளைத்தனர். தாங்கள் கொடுத்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் கோவிந்தராஜோ, பணத்தைத் திருப்பித்தர முடியாது என்று தடாலடியாக கூறியதுடன், தன்னை நெருங்கிய கும்பலைப் பார்த்து கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவருடன் இருந்த மற்றொரு நபரும் தப்பி ஓடிவிட்டார்.
அதையடுத்து தேவராஜ் மற்றும் மாதேஹள்ளியைச் சேர்ந்த வடிவேல், சுப்ரமணி, கோணம்மாள், பாப்பாரப்பட்டி முனுசாமி, பூங்கான், தட்டாரப்பட்டி ராஜா, கானாப்பட்டி சின்னப்பிள்ளை உள்ளிட்டோர் திரண்டு சென்று உடனடியாக தர்மபுரி நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரில், அரசாங்க வேலை வாங்கித் தருவதாகக்கூறி கோவிந்தராஜ் (29), அரசுப் பேருந்து ஓட்டுநரான அவருடைய உறவினர் முருகன் (41), இவருடைய மனைவி ஷீலா (31) மற்றும் ஷீலாவின் தம்பி திருமலை (29) ஆகியோர் பல பேரிடம் ஒரு கோடி ரூபாய் வரை வசூலித்துவிட்டு மோசடி செய்ததாக புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மல்லுப்பட்டியில் பதுங்கி இருந்த ஷீலாவையும், அவருடைய தம்பி திருமலையையும் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளிகளான கோவிந்தராஜ், முருகன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இந்த மோசடி வழக்கில், உண்மையில் இந்த நான்கு பேருக்கு மட்டும்தான் தொடர்பா அல்லது அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சியினருக்கும் தொடர்பு இருக்கிறதா? இன்னும் வேறு யார் யாரிடமெல்லாம் இதுபோல் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.