திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பௌர்ணமி ஜூன் 21ஆம் தேதி மாலை தொடங்கியது. அன்றைய தினம் காலை முதலே ஆந்திரா, தெலுங்கானாவில் இருந்து லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். இரவு கிரிவலம் முடித்துவிட்டு ஜூன் 22 ஆம் தேதி விடியற்காலை மீண்டும் தங்கள் வந்த கார்கள், பஸ்கள், வேன்களில் ஊருக்கு திரும்பி சென்றுக்கொண்டு இருந்தனர்.
அப்படி செல்லும்போது, திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள குருவிமலை கிராமத்தின் அருகே செல்லும் பொழுது, வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தும், திருவண்ணாமலையில் இருந்து ஆந்திரா மாநிலத்தை நோக்கி சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் காரில் பயணம் செய்த, ஜெகன்மோகன்(17), பிரவிளிகா(34) ஆகிய இருவரும் படுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்.
உடன் பயணித்த சாயிக் நயாக் ரசூல்(25), சுஜாதா(28), ஆதிநாராயணா(45), ருசிங்கம்மாள்(42), ஜோதி(35), வரலட்சுமி(55), கோபால்(37), நிர்மலா(40), லலிதா(19), தவிட்டி நாயுடு(38) ஆகிய பத்து நபர்களும் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கலசப்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.