நேற்று மார்கழி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் தமிழகத்தின் அனைத்துக் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கும் விடியற்காலை முதலே பக்தர்கள் கூட்டம் வந்தபடியே இருந்தது. மலை உச்சியில் எரிந்து வரும் அண்ணாமலையார் கோவில் மகாதீபத்தின் கடைசி தினம் நேற்று என்பதால் கூடுதலாகவே பக்தர்கள் வந்தனர். தற்போது வரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டு இருக்கின்றனர். தற்பொழுதெல்லாம் வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு மட்டுமல்லாமல் அனைத்து நாட்களிலுமே தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரியில் இருந்து பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.
கிரிவலப் பாதை என்பது 14.5 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. இந்த கிரிவலப் பாதையில் உள்ள கழிவறை, இலவச பக்தர்கள் ஓய்வு அறை, குடிநீர் டேங்க்குகளை திருவண்ணாமலை நகராட்சி, அத்தியந்தல் ஊராட்சி, அடி அண்ணாமலை ஊராட்சி, வேங்கிக்கால் ஊராட்சி போன்றவை நிர்வகித்து வருகின்றன. இந்த கழிவறைகள் பௌர்ணமி அன்று மட்டும்தான் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் திறக்கப்படுவதில்லை. இதனால் கிரிவலம் வரும் பக்தர்கள் சிறுநீர் கழிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். ஆண்கள் சாலை ஓரங்களிலேயே மறைவான பகுதியில் சிறுநீர் கழித்துவிடுகின்றனர். பெண்களின் நிலைதான் மிகவும் மோசமாக இருக்கிறது என்கின்றனர் பக்தர்கள்.
அதேபோல் கிரிவலப்பாதையில் குடிநீருக்கு என நெடுஞ்சாலைத்துறையும் அங்குள்ள ஊராட்சிகளும் குடிநீர் டேங்க் வைத்து பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கி வருகின்றன. இந்தக் குழாய்களிலும் பெளர்ணமி அன்று மட்டுமே தண்ணீர் வருகின்றன. மற்ற நாட்களில் தண்ணீர் வராமல் அந்த குழாய்களில் வெறும் காற்று மட்டுமே வருகிறது. தண்ணீரின்றி பக்தர்கள் பாட்டில் தண்ணீர் வாங்கி குடிக்கின்றனர். இரண்டு இடங்களில் மட்டும் தன்னார்வல அமைப்புகள் இலவச கேன் தண்ணீரை வழங்குகின்றனர். மார்கழி மாதப் பிறப்பு என்பதால் கிரிவலப்பாதையில் 4 இடங்களில் அன்னதானம் செய்துகொண்டு இருந்தார்கள். அதை வாங்கிச் சாப்பிட்ட மக்கள் குடிக்கவும், கை கழுவவும் தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டதைக் காணமுடிந்தது.
14.5 கிலோமீட்டர் தூரத்தில் சில இடங்களில் மட்டுமே தண்ணீர் வருகின்றன. கழிவறைகளை மூடியே வைத்துள்ளனர். கொஞ்ச நேரம் உட்காரலாம் என்றால் பெஞ்ச்களில் சாமியார்கள் படுத்துக்கொண்டு இருக்கிறார்கள் என பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தினசரி இல்லையென்றாலும் முக்கிய தினங்களில் பக்தர்களுக்கு குடிநீர் வழங்கவும் கழிப்பறை, ஓய்வறைகளை திறந்து வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.
- படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்