தென்னிந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா. இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 13 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் சுமார் 40 லட்சம் பக்தர்கள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபத் திருவிழாவின் முக்கிய இரண்டு நிகழ்ச்சிகள் என்பது பெரிய தேர் என்கிற மகாரதம் வீதி உலாவும், மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபமும்மே ஆகும். இந்த இரண்டு திருவிழாவுக்கும் பல லட்சம் மக்கள் பல மாநிலங்களில் இருந்துவந்து குவிவார்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே மகாரதம் மீது பக்தர்களுக்கு பெரும் குறை இருந்தது. காரணம் அந்த தேரை இழுக்கும்பொழுது அதிலிருந்து சிறு சிறு பொம்மைகள் கீழே விழுந்தன. அதனால் இதனைச் சீரமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது. இந்த ஆண்டு பெரியத்தேர், அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர், முருகர் தேர் விநாயகர் தேர் என ஐந்து தேர்களும் 79 லட்ச ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டன. அதற்கான வெள்ளோட்டம் கடந்த எட்டாம் தேதி நடைபெற்றது. இதற்கு சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு அளிக்க திருவண்ணாமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள் வெளியூர் பக்தர்கள் என சுமார் 10 ஆயிரம் பேர் இந்த வெள்ளோட்டத்தில் கலந்துகொண்டு இந்த தேரை இழுத்துச் சென்றனர்.
இதில் இப்பொழுது சில சர்ச்சைகளும் உருவாகியுள்ளன. அதாவது தேர் அளவை குறைத்து விட்டார்கள், உயரத்தை குறைத்து விட்டார்கள் எனச் சிலர் பேசத் தொடங்கியுள்ளனர். இது பற்றி நாம் அறநிலையத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்த பொழுது, திருவிழாவின்போது தேர் முழுக்க அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும் இதனால் பக்தர்களுக்கு தேர் உயரமாக இருப்பது போன்றும் அகலமாக இருப்பது போன்றும் இருக்கும். இப்பொழுது நடந்தது வெள்ளோட்டம். இதில் அலங்காரம் என்பது 90 சதவீதம் இல்லை இதனால் தேர் சிறியது போன்று தோன்றும்.
மற்றொரு காரணம், பழைய மகாரதத்தின் உயரம் 66 அடியாக இருந்தது. அதனைப் பார்த்த வயதான பெரியவர்கள், இதனை மகாரதம் எனச்சொல்லமாட்டார்கள்.
கோவில் நிர்வாகத்தில் உள்ள ஆவணங்களின்படி, 59 அடி உயரமும் 200 டன் எடையும் கொண்டது தற்போதுள்ள மகாரதம். 1962 ஆம் ஆண்டு அந்த ஆண்டு பெய்த பெரு மழையில் இடி மின்னல் தாக்கி அந்த தேர் தீப்பிடித்து முற்றிலும் எரிந்து விட்டது, இது பக்தர்களை அதிர்ச்சியடைய செய்துவிட்டது. அப்போது கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு சில மாதங்களே இருந்ததால், தர்மகார்த்தாவும், கோவில் நிர்வாகமும் அந்த ஆண்டு நடக்க வேண்டிய தேர் திருவிழாவுக்காக உடனடியாக மகாரதத்தை உருவாக்க முடியாது என்பதால் அம்மன் தேரை மகாரதமாக மாற்ற முடிவு செய்து மாற்றினர். அதற்கடுத்த நிலையில் இருந்த முருகர் தேரை அம்மன் தேராகவும் விநாயகர் தேரை முருகர் தேராகவும் மாற்றம் செய்தனர். விநாயகருக்கு என புதியதாக தேர் செய்துள்ளனர். அதற்குப்பின் இதுவரை தேரில் எந்த வித மாற்றமும் செய்யவில்லை. எரிந்து போன மகாரதத்துக்கு பதிலாக புதியது செய்யவில்லை. அந்த தேர்கள் தான் இப்போது வரை ஓடிக்கொண்டு இருக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்கள் சீரமைப்பு நடைபெறும், இந்த முறை பெரியளவில் நடந்துள்ளது. பெரிய தேரில் தேவாரசனம், சிம்மாசனம், சிங்க முகம், சிம்ம யாழி, கொடி யாழி, அலங்கார தூண்கள், இறைவாசனம், பிரம்மா மற்றும் துவாரக பாலகர்கள், 203 சிறு சிறு பொம்மைகள் புதியதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இது பக்தர்களிடம் வரவேற்பையும் பெற்றுள்ளது.
அதேபோல் மகாரதம் வீதி உலா வரும்போது, அதன் மீது நான் இருக்க வேண்டும் இல்லையேல் தேரில் இருந்து கீழே குதித்து விடுவேன் என மிரட்டி ஒருவர் வீதி உலா வந்த தேர் மீது ஏற அதிகாரிகளை பிளாக்மெயில் செய்ததாகவும், கோவில் நிர்வாகத்திற்கு அறங்காவலர் குழுவுக்கு சம்பந்தம் இல்லாதவர்களும் தேர் மீது அமர்ந்து அதிகாரம் செலுத்தியது உள்ளிட்டவை உள்ளூர் கோவில் அலுவலர்களிடையே அதிருப்தியை உருவாக்கியுள்ளது.