தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அமைச்சர்களும் பொறுப்பேற்றுக்கொண்டனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அண்மையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் கோயில்களின் 72 சதவீத நில விவரம் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலங்களில் முதற்கட்டமாக 3.43 லட்சம் ஏக்கர் நிலங்கள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னையில் 4 கோயில்கள், கோவை, திருச்சியில் தலா 5 என மொத்தம் 47 கோயில்களின் நிலவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட கோவில்களின் நிலங்கள் மீட்கப்பட்டுவரும் நிலையில், ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.