தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. சுமார் 57 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. குறிப்பாக மாநகராட்சி பகுதிகளில் வாக்கு சதவீதம் மிகக்குறைவாகப் பதிவானது. மேலும் சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரம் பழுதானது, சில இடங்களில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை அடுத்து 5 வார்டுகளுக்குட்பட்ட 7 வாக்குப்பதிவு மையங்களில் மறுவாக்குப்பதிவுக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தேர்தலன்று பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்போடு வாக்குப்பதிவு மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் அதை பார்வையிட்டு வருகிறார்கள். இந்நிலையில், பதிவான வாக்குகள் அனைத்தும் நாளை தமிழகம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்பட இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் செய்து வருகிறார்கள். நாளை காலை 9 மணி முதல் முதற்கட்ட முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.