திண்டுக்கல் மாநகரில் உள்ள தொழிற்பேட்டை அருகே இருக்கும் ராயல் சிட்டி நகரில், பொதுமக்கள் குடியிருப்பு அமைந்திருக்கும் சாலைக்குள் அரசு அதிகாரிகளுடன் வந்த பொக்லைன் இயந்திரம், அந்தத் தெருவில் வீடுகளுக்கு முன் இருந்த மரங்கள், செடிகள், வீட்டின் வாசற்படி, கழிவுநீர்க் குழாய், குடிநீர்க் குழாய் ஆகியவற்றை இடித்துத் தள்ளியது. இந்தக் காட்சியைக் கண்ட அத்தெரு மக்கள் பதறிப்போயினர். ஏன் இந்த நடவடிக்கை என மக்கள் அங்கு வந்திருந்த அரசு அதிகாரிகளிடம் கேட்க, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதுகுறித்து புகாரும் வந்துள்ளதால் இடிக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
அதே குடியிருப்பின், கடைசி வீட்டில் திண்டுக்கல் மாவட்ட சுகாதார துணை இயக்குநர் (D.D.) வரதராஜன் என்பவர் குடியிருக்கிறார். அவர்தான் இந்தப் புகாரைத் தெரிவித்திருக்கிறார் என்று அறிந்த அத்தெரு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபடு அவர்களைக் கலைய வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், "இங்கு கடந்த பத்து வருடங்களாகவே சாக்கடை, சாலை வசதிகள் இல்லாததால் இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் கழிவுநீர் உறைகுழி அமைத்து, அந்த நீரை உறிஞ்சுவதற்காக சிறு சிறு செடிகள், மரங்களை வீட்டுக்கு முன்பாக வைத்திருக்கிறோம். இது போக்குவரத்திற்கு இடையூறின்றிதான் இருக்கின்றது.
இங்கு சாலையும் குண்டும் குழியுமாக இருக்கிறது. கடந்த சில நாட்களாகப் பெய்துவந்த மழையால் சாலையில் செல்ல முடியாத நிலையில்தான் இருக்கிறோம். இருந்தபோதிலும், எப்படியோ சமாளித்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், டி.டி., தனது காரில் வேகமாகச் சென்றுவருவது வழக்கம். இந்த நிலையில்தான் தற்போது ஏற்பட்ட சிறு பள்ளங்களும், வீடுகளுக்கு முன் இருக்கும் மரங்களும் அவருக்கு இடையூறாக இருக்கிறது என தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மாநகராட்சி கமிஷனர் சிவ சுப்பிரமணியத்திடம், ‘எங்கள் பகுதியில் ஆக்கிரமிப்பு இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. அதை உடனே அகற்ற வேண்டும்’ என புகார் கொடுத்துள்ளார் டி.டி. வரதராஜன்.
இதனைத் தொடர்ந்து கமிஷனரும், மாநகராட்சி அலுவலர்களுடன் பொக்லைன் இயந்திரத்தை இந்தக் குடியிருப்பு பகுதிக்கு அனுப்பி வீடுகளுக்கு அருகிலிருந்த மரங்கள், வீட்டின் வாசற்படி, கழிவுநீர்க் குழாய், குடிநீர்க் குழாய் ஆகியவற்றை கண்மூடித்தனமாக அதிரடியாக இடித்துத் தள்ளினர்" என்று தெரிவித்தனர். மேலும், டி.டி வரதராஜன் குறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியர் விசாகன் ஆகியோருக்குப் புகார் மனு அளித்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து நாம் சுகாதாரத்துறை துணை இயக்குநர் வரதராஜனை தொடர்புகொண்டோம். அப்போது அவர், “நான், பாதையை ஆக்கிரமித்து சிலர் இடையூறாக கழிவுநீர் உறை மற்றும் மரங்கள் வைத்துள்ளதாக மட்டும்தான் புகார் அளித்தேன். மாநகராட்சி சார்பில்தான் எல்லாவற்றையும் அகற்றியுள்ளனர்” என்று தெரிவித்தார்.
அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இன்று (27.10.2021) டி.டி. வரதராஜன் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாகன் விவரங்கள் பெறவிருப்பதாகவும் தெரிகிறது.
சுகாதாரத்துறை துணை இயக்குநர் வரதராஜன் பழனி, திண்டுக்கல், தேனி, சங்கரன்கோயில், திருநெல்வேலி, திண்டுக்கல் என அடிக்கடி பணி இடமாறுதலுக்கு உட்படுத்தப்படுபவராகவும் இருந்துவருகிறார் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.