ஆசிய அளவில் மிக உயரமான சுடுமண் சிலையாக வடிவமைக்கப்பட்ட 17 அடி உயர பெரியசாமி சிலை மற்றும் 14 அடி உயர பட்டத்துக் குதிரை சிலைகளை நேற்று (28.10.2021) இரவு மர்ம கும்பல் உடைத்து சேதப்படுத்திச் சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அளவில் பிரசித்தி பெற்றதும், பெரம்பலூர் மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாகவும் கருதப்பட்டுவரும் சிறுவாச்சூர் அருகேயுள்ள பெரியசாமி மலையில் தமிழரின் தொன்மைக்கு அடையாளமாக பார்க்கப்பட்டுவந்த சுடுமண்ணால் ஆன கடவுள் சிலைகளைக் கடந்த மஹாலய அமாவாசை தினத்தன்று நள்ளிரவில் மர்ம கும்பல் ஒன்று சிதைத்து சேதப்படுத்திச் சென்றது.
இச்சம்பவத்தில் பெரியசாமி மலையின் பிரதான பெண் தெய்வமான செல்லியம்மன் சிலை முற்றிலும் உடைத்து தகர்த்தெறியப்பட்டது. இது தொடர்பாக ஒருவரைக் கைதுசெய்து சிறையிலடைத்த நிலையில், இந்த சம்பவத்தின் பின்புலம் குறித்து திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் உத்தரவின்பேரில் மாவட்ட காவல்துறை தொடர் விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில், 18 நாட்களுக்குப் பிறகு நேற்று இரவு அந்தக் கும்பல் மீண்டும் பெரியசாமி மலைக்கோயிலில் சிலைகளை உடைத்துள்ளது. குறிப்பாக ஆசிய அளவில் மிக உயரமான சுடுமண் சிலைகளாகப் பேசப்பட்டுவந்த 14 அடி உயர பட்டத்துக் குதிரை சிலை, மற்றும் 16 அடி உயர பெரியசாமி சிலை, 15 அடி உயர செங்கமலையார் சிலைகள் உட்பட 15க்கும் மேற்பட்ட சிலைகளை உடைத்துச் சேதப்படுத்தியுள்ளது அந்தக் கும்பல்.
பெரம்பலூர் மாவட்டத்தின் அடையாளமாக கருதப்பட்டுவரும் இந்த சுடுமண் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதால் பக்தர்கள் மத்தியில் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே நேற்று மாலை இச்சம்பவத்தைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் பகுதியில் 50க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டதால் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்த போலீசார் போக்குவரத்தை சரி செய்தனர்.