தென்பாண்டிச் சீமையின் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம், ஏழைகளின் சொர்க்கம் என்ற பேச்சு வழக்கு நீண்டகாலமாக உள்ளது. ஏனெனில் அந்த மலையைச் சுற்றி எட்டுக்கும் மேற்பட்ட அருவிகள் கொட்டுவதுதான். சாதாரணமாக மக்கள் அதில் அருவிக்குளியல் போடுவதால்தான் அந்தப் பெயர் வந்தது. தென்மேற்குப் பருவ மழை ஆரம்பமாகும் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கேரளாவில் மையம்கொள்ளும் தென்மேற்குப் பருவ மழையின் தாக்கம் மேற்குத் தொடர்ச்சி மழையின் அடுத்த பக்கமிருக்கும் குற்றால மலைவரை இருக்கும்.
அதன் காரணமாக தென்காசி பகுதிகளில் 3 மாதமும் சாரல் மழை தொடர்ந்து பெய்வதால் குற்றால மலையிலிருக்கும் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாய்க் கொட்டும். அதனால்தான் இதனை ஏழை மக்களின் கோடை வாசஸ்தலம் என்கிறார்கள். கடந்த 2020ஆம் ஆண்டு தென்மேற்குப் பருவ மழை காலத்தில் குற்றால மலைகளில் மழை பெய்ததின் காரணமாக மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி போன்ற 8 அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாய்க் கொட்டியது. ஆனால், கடந்த வருடம் மார்ச் மாதம் லாக்டவுண் அறிவிக்கப்பட்டதால் அந்த சீசன் காலங்களில் குற்றால அருவிகளில் மக்கள் குளியல் போடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு தளர்த்தப்பட்ட லாக்டவுணில் மக்கள் அருவிக் குளியல் போட அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், குற்றால சீசனை அனுபவிக்கவரும் மக்களின் கூட்டத்தால் அந்நகரில் வியாபாரம் பொருட்டு களைகட்டும் கடைகளில் வியாபாரத்திற்கான அனுமதி மறுக்கப்பட்டதால் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் கடந்த வருடம், குற்றாலத்தையே பிழைப்புத் தொழிலாக நம்பி காலம்காலமாக வியாபாரம் செய்துவரும் பல நூறு வியாபாரிகள் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
‘இது போகட்டும், அடுத்த வருடமாவது குற்றாலத்தில் அருவிகள் கொட்டும், தடையேதும் இருக்காது. வியாபாரத்தை தொடர்வதற்கு வசதியாக இருக்கும். வருமானமின்றித் தவித்த நமது வாழ்வில் விடியல் பிறக்கு’மென்று நம்பியிருந்தார்கள். ஆனால் கடந்த மாதம் தமிழ்நாட்டில் அடியெடுத்து வைத்த கரோனா இரண்டாம் அலை சுனாமியாக தாக்கியதால், தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கைப் பிறப்பித்தது. இதனால் நம்பிக்கையோடிருந்த அந்த வியாபாரிகள் இடிந்தே போனார்கள். தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளாவில் தென்மேற்குப் பருவமழை சில நாட்களில் தொடங்கும் என்று வானிலைத் தகவல்கள் தெரிவித்ததால் அதற்கான சூழல் அங்கு நிலவியது.
கோடை பருவ மழையும் ஆரம்பித்தது. அதன் தாக்கத்தால் கடந்த சில நாட்களாக குற்றாலம் மற்றும் தென்காசி மாவட்டப் பகுதிகளில் தென் மேற்குப் பருவக்காற்று இதமாக வீசியது. இந்த சாரல் மழை காரணமாக, தற்போது குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வஞ்சனையின்றி கொட்டுகிறது. ஆனால் குளிக்கத்தான் மக்களில்லை. காரணம் முழு ஊரடங்கு. இது இப்படியிருக்க, குற்றாலப் பகுதிகளிலிருக்கும் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் சீசன் காலங்களில் மக்கள் கூட்டத்தால் தரப்படும் உணவுகளை உண்டு மகிழ்ந்தன.
மலையில் கிடைக்கும் பழங்கள் தவிர, மக்கள் போடும் உணவுகளும் அந்த வாயில்லா ஜீவன்களின் பசியைப் போக்கிவந்தன. ஆனால், தற்போது அந்த விலங்குகளின் நிலையோ மிகவும் பரிதாபம். ஏனெனில், குற்றால நகரில் மக்கள் கூட்டமில்லாததால் அந்த வன விலங்குகள் உணவுக்காக பரிதாபமாக அலைபாய்வதும் அல்லாடுவதும் வேதனையான ஒன்று. தடை காரணமாக இந்த வாயில்லா ஜீவன்களை மக்கள் அணுக முடியாது. ஆனால் அரசு நினைத்தால் அவற்றுக்கு உணவுப்படி அளக்கலாம்.