
ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரச்சந்தை, தினசரி கடைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கு நடைபெறும் வாரச்சந்தை உலகப் புகழ்பெற்றது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது. விடிய விடிய நடைபெறும் இந்த ஜவுளி சந்தையில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, நேபாளம் போன்ற மாநிலங்களிலிருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்து மொத்த விலையில் ஜவுளிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.
இதேபோல் பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து ஆன்லைன் மூலம் ஆர்டரின் பெயரில் ஜவுளி வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதேபோல் உள்ளூர் மாவட்டத்திலிருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வருவார்கள். இந்நிலையில் ஆனி மாதம் பிறந்ததையொட்டி கடந்த சில நாட்களாகவே ஜவுளி வியாபாரம் மந்த நிலையில் இருந்து வருகிறது. இந்த மாதத்தில் எந்த ஒரு விசேஷமும் இருக்காது என்பதால் விசேஷம் தொடர்பான வியாபாரமும் சூடு பிடிக்கவில்லை.
இந்நிலையில் இன்று கூடிய சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் அறவே வரவில்லை. இதனால் ஜவுளி சந்தை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் அதே சமயம் உள்ளூர் வியாபாரிகள் ஒரு சிலர் வந்திருந்தனர். இன்று மொத்த வியாபாரம் 15 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. சில்லறை வியாபாரம் 20 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இந்த மாதம் முழுவதும் ஜவுளி வியாபாரம் மந்த நிலையில் இருக்கும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஆடி மாதம் பிறந்தால் வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தனர்.