Skip to main content

துணை முதல்வர் ஓ.பி.எஸ். தொகுதியில்  கேரளா கழிவுகள்!

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
pa

 

தேனி மாவட்டத்தில் உள்ள துணை முதல்வர் ஓ.பி.எஸ். தொகுதியான போடி தொகுதியில் இருக்கிறது குச்சனூர். இந்த குச்சனூர் அருகே உள்ள சங்கராபுரத்தில் கேரளாவைச் சேர்ந்த ஆன்மீகத்தை பரப்பும் அமிர்தானந்தாமாயியின் அறக்கட்டளைக்கு சொந்தமான 180 ஏக்கரில் பண்ணைத் தோட்டம்  உள்ளது. இந்த பண்ணைத் தோட்டத்தில் கேரளாவிலிருந்து கழிவுப் பொருட்களை கொண்டு வந்து கொட்டி வருகிறார்கள். இதனால் அப்பகதியில் துர்நாற்றம் வீசியும் தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருவதால் இதுபற்றி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் அப்பகுதி மக்கள் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் கோட்டாட்சியர், ஊரக வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆகியோர் அந்த பண்ணைத் தோட்டத்திற்கு விசிட் அடித்து ஆய்வு செய்தனர். அதுபோல் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரனும் தோட்டத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். 

 

paa

 

இது சம்மந்தமாக அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது... கேரளாவைச் சேர்நத அமிர்தானந்தாமாயியிக்கு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம் உள்பட சில இடங்களில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை இருக்கிறது. இந்த மருத்துவமனையில் வரக்கூடிய கழிவுகளை கேரளாவில் அப்புறப்படுத்தாமல் தமிழகத்தில் உள்ள இப்பகுதியில் அந்த அம்மையாருக்கு தோட்டம் இருப்பதால் அந்த கழிவுகளை இங்கு கொண்டு வந்து போடுகிறார்கள். இதனால் அப்பகுதி பக்கம் சென்றாலே துர்நாற்றம் வீசுகிறது. அதோடு உடம்புகளிலும் அரிப்பு வந்துவிடுகிறது. அந்தஅளவுக்கு அந்த கழிவுகள் மூலம் ஒரு தொற்றுநோய் உருவாகும் சூழ்நிலை இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த தோட்டத்தில் இப்படிப்பட்ட கழிவுகளை கொட்டக்கூடாது என்று இப்பகுதியில் உள்ள மக்கள் அங்குள்ள தோடட வேலையாட்களிடம் கூறியிருந்தும் அப்படி இருந்தும் கூட இதற்கு முன்பு பல முறை பல டன் கழிவுப் பொருட்களை கேரளாவிலிருந்து இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக கொண்டு வந்து இங்குள்ள தோட்டம் காடுகளில் புதைத்தும், குழி தோண்டியும் போட்டும் இருக்கிறார்கள்.

 

pannai

 

அதையெல்லாம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு நோய் தாக்கும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறோம். அதோடு இப்பகுதியில் உள்ள நாம் தமிழர் கட்சி உள்பட சில அரசியல் கட்சியினரும் அந்த கழிவுகளை அகற்றக் கோரி கண்டன குரல் எழுப்பி வருகிறார்கள். அதனால் இப்பகுதியில் கொட்டப்பட்ட கழிவுகளை உடனடியாக அதிகாரிகள் அகற்ற முன்வரவேண்டும். இல்லையென்றால் மக்கள் சார்பில் போராட்டம் வெடிக்கும் என்று கூறினார்கள். ஆனால் துணை முதல்வர் ஓ.பி.எஸ். தொகுதியில் கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கழிவுகள் மூலம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று தெரிந்தும்கூட ஓ.பி.எஸ். கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வருத்தமாக இருக்கிறது!

சார்ந்த செய்திகள்