அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது உருவாகியுள்ளது. தமிழகத்தில் சுமார் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிலிருந்து மழை பெய்யத் தொடங்கியுள்ளது. டெல்டா மாவட்டங்கள், சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து பரவலாக விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இடைவிடாது 16 மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் சம்பா, தாளடி பயிர்கள் பல இடங்களில் நீரில் மூழ்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மாமல்லபுரம், கல்பாக்கம், புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக இன்று மீன் பிடிக்கச் செல்லவில்லை.