சிதம்பரம் ரயில் நிலையத்தில் பல் மருத்துவர் ஒருவர் விபத்தில் காலை இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனூர் கிராமத்தைச் சேர்ந்த தளபதி ராஜன் மகன் செல்வகுமார் (25) என்பவர் முதுநிலை பல் மருத்துவம் பயின்று வருகிறார். இவர் வியாழக்கிழமை மாலை சிதம்பரம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை செல்வதற்காக டிக்கெட் எடுத்துக்கொண்டு நடைமேடையில் நின்றுள்ளார்.
அப்போது மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் நோக்கி வந்த பயணிகள் ரயிலில் ஏறியுள்ளார். ரயில் புறப்பட்டு சிதம்பரம் ரயில் நிலையத்தை விட்டு சிறிது தூரம் சென்றபோது மயிலாடுதுறை செல்லும் ரயிலில் ஏறுவதற்குப் பதிலாக விழுப்புரம் செல்லும் ரயிலில் ஏறியதை அறிந்தார். உடனடியாக பதற்றத்தில் அவர் ரயிலிலிருந்து இறங்கும்போது அவரது ஒரு கால் ரயில் சக்கரத்தில் மாட்டி துண்டாகியது. இதனையறிந்த ரயில்வே காவல்துறையினர் மற்றும் அங்கிருந்தவர்கள் இவரை மீட்டு உடனடியாக 108 அவசர ஊர்தி மூலம் ராஜா முத்தையா கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவரது காலை ஒட்ட வைப்பதற்கான சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பல் மருத்துவர் ரயில் மாறி ஏறி காலை இழந்த சம்பவம் சக மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.