நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. நாளை (16.03.2024) தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி இன்று வந்துள்ளார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விவேகானந்தர் கல்லூரிக்கு வந்த அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதே சமயம் கோவையின் கண்ணப்ப நகரில் இருந்து ஆர்.எஸ்.புரம் வரையில் 4 கி.மீ. தூரத்திற்கு பிரதமர் மோடி மார்ச் 18 ஆம் தேதி ரோடு ஷோ நடத்த பாஜக சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்த மாநகர காவல் ஆணையர் அனுமதி மறுத்துள்ளார். ஏற்கனவே கோவையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளதையும், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளதையும் மேற்கோள்காட்டி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.