தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக உள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பரவலாகக் கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 23 மற்றும் 24ஆம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தில் குறிப்பாக, திருநெல்வேலி. தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்தது. அச்சமயத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை பெய்ததால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அருவியில் குளிக்க கடந்த 7 நாட்களாகத் தடை நீட்டிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் குற்றால அருவியில் நேரடியாக ஆய்வு செய்திருந்தனர்.
இந்நிலையில் குற்றால அருவியில் குளிக்க 7 நாட்களுக்கு பிறகு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றால அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் பாதிப்பு உள்ளதால் பெண்களுக்கு அருவியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள பாதுகாப்பு வளைவு சேதமடைந்துள்ளதாலும், அப்பகுதியில் உள்ள கம்பிகள் ஆபத்தான முறையில் வெளியில் நீட்டியபடி உள்ளதாலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குற்றால அருவியில் குளிக்கச் சபரிமலை பக்தர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் குற்றால அருவிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.