நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன சட்டம் குறித்து சிறப்பு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் முடிவில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் மத்திய உள்துறை அமித்ஷா பேசியது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, வயநாடு எம்.பி பிரியங்கா காந்தி, தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர், அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து நேற்று (18.12.2024) போராட்டம் நடத்தினர். அதோடு அமித்ஷாவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இத்தகைய சூழலில் தான் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று (19.12.2024) மீண்டும் போராட்டம் நடத்தினர். அதே சமயம் பாஜகவினரும் போட்டி போராட்டம் நடத்தினர். அப்போது இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் தனது மண்டை உடைந்ததாக பா.ஜ.க. எம்.பி. பிரதாப் சாரங்கி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பிரதாப் சந்திர சாரங்கி செய்தியாளர்களிடம் கூறுகையில், “என் மீது விழுந்த எம்.பி. ஒருவரை ராகுல் காந்தி தள்ளினார். அதன் பிறகு நான் கீழே விழுந்தேன். அதாவது நான் படிக்கட்டுக்கு அருகில் நின்று கொண்டிருந்தபோது என் மீது விழுந்த எம்.பி. ஒருவரை ராகுல் காந்தி தள்ளினார்” எனத் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் இது குறித்து ராகுல் காந்தி கூறுகையில், “இது தொடர்பான காட்சிகள் கேமராவில் இருக்கலாம். நான் நாடாளுமன்ற நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல முயன்றபோது, பா.ஜ.க. எம்.பி.,க்கள் என்னை தடுத்து, தள்ளிவிட்டு, மிரட்டல் விடுத்தனர். அதனால் மல்லிகார்ஜுன் கார்கே அவர்களை எதிர்த்து தள்ளினார். இதனால் இந்த சம்பவம் நடந்தது. ‘இது நுழைவு வாயில், உள்ளே செல்ல எங்களுக்கு உரிமை உள்ளது’ என பாஜக எம்பிக்கள் எங்களை உள்ளே செல்ல விடாமல் தடுக்க முயன்றனர். அவர்கள் அரசியல் சாசனத்தைத் தாக்குவதும், அம்பேத்கரின் நினைவை அவமதிப்பதும்தான் மையப் பிரச்சினை” எனத் தெரிவித்தார்.
அதே சமயம் பாஜகவைச் சேர்ந்த மற்றொரு எம்.பி.யான முகேஷ் ராஜ்புத்துக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால், ஆர்.எம்.எல். மருத்துவமனையின் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். மேலும், ‘ராகுல் காந்தி தனது வலிமையைக் காட்ட பாஜக எம்பிக்களை தாக்கியது சரியல்ல. எனவே பா.ஜ.க. எம்.பி.க்களை தள்ளி விட்டதற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் தெரிவித்துள்ளார்.