தமிழகத்தில், குறிப்பாகத் திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து கேரள மாநிலத்திற்குக் காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கனிம வளங்கள் லாரிகளில் அனுப்பப்படுகின்றன. அதன் பின்னர் கேரளாவில் இருந்து திரும்பி வரும் லாரிகளில் கோழி இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் போன்றவை மூட்டை மூட்டையாக கொண்டுவரப்பட்டு தமிழகத்தில் கொட்டப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் சீதற்பநல்லூர் அருகே உள்ள நடுக்கல்லூர், பலவூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூட்டை மூட்டையாகக் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன. அதாவது திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் அதிகப்படியாகக் கொட்டப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. இந்த மருத்துவக் கழிவில் மருத்துவமனையின் அனுமதிச் சீட்டுகள், ரத்தக் கசிவுகள், பஞ்சுகள் மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள் போன்ற பல்வேறு வகையான பொருட்கள் கழிவுகளாகக் கொட்டப்பட்டன.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை, ஊராட்சித்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவும் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. அதே சமயம் அப்பகுதி மக்கள், ‘தமிழக - கேரள எல்லையில் வாகன சோதனையை அதிகரிக்க வேண்டும்’ என்று அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். கேரளாவைச் மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி பகுதியில் கொட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமுக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து கொட்டப்பட்டு வரும் நிலையில், தற்போது திருநெல்வேலி மாவட்டத்தின் கல்லூர், பழவூர் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்பட்டிருப்பதற்கு எனது கடும் கண்டனம். கேரள முதல்வருடன் கைகுலுக்கி போட்டோஷூட் எடுப்பதில் மட்டும் முனைப்பாக இருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, முல்லைப் பெரியாற்றில் மாநில உரிமைகளை நிலை நாட்டத் தான் இயலவில்லை என்று பார்த்தால், அண்டை மாநிலத்தின் கழிவுகள் நம் மாநிலத்தில் கொட்டப்படுவதை எதிர்ப்பு கூட தெரிவிக்காத முதல்வராக இருக்கிறார்.
வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல!. கொட்டப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால் அனைத்து குப்பைகளும் உடனே அகற்றப்பட வேண்டும்; இனி இதுபோன்று பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்குத் திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.