
செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் ஒராண்டுக்கு மேலாக சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு, கடந்த 26 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட்டு, செந்தில் பாலாஜிக்கு மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வு துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, நேற்று அவர் தமிழக அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றார்.
தொடர்ந்து உச்சநீதிமன்ற நிபந்தனைப்படி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். இந்நிலையில் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயனிடம் இந்த வழக்கின் விசாரணையை அக்.14ஆம் தேதி ஒத்திவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. ஆனால் அதனை நிராகரித்த முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் அக்டோபர் 4 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது. அதேபோல் இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணன் அக்டோபர் நான்காம் தேதி ஆஜராக வேண்டும் என பிடிவாரண்ட் உத்தரவும் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.