பாலியல் புகாரில் சிக்கிய பெரியார் பல்கலை உதவி பேராசிரியருக்கு முன்பிணை மறுக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
சேலம் கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (32). பெரியார் பல்கலையில் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இப்பல்கலையில் எம்.ஏ., இறுதியாண்டு படித்து வரும் பட்டியலின மாணவி ஒருவர், இவர் மீது பாலியல் தொல்லை மற்றும் சாதியைச் சொல்லி திட்டியதாக, பல்கலை பதிவாளர் (பொ) தங்கவேலிடம் புகார் அளித்து இருந்தார்.
மாணவி சார்பில் பதிவாளர், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பிரேம்குமார் மீது பாலியல் தொல்லை, மிரட்டல், பெண் வன்கொடுமை மற்றும் சாதி வன்கொடுமை ஆகிய நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தலைமறைவானார்.
பல்கலையில் நடந்து வரும் முறைகேடுகளை எதிர்த்துக் கேள்வி கேட்டார் என்பதற்காக பிரேம்குமாரை பல்கலை நிர்வாகம் ஏற்கனவே பணியிடைநீக்கம் செய்திருந்தது. மேலும், பல்கலை நிர்வாகம் மாணவி ஒருவரை தூண்டிவிட்டு அவருக்கு எதிராக பாலியல் மற்றும் சாதி வன்கொடுமை புகார் அளிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. பல்கலை நிர்வாகத்தின் முறைகேடுகள் குறித்து பாமக எம்.எல்.ஏ அருள், சட்டமன்றத்திலும் பேசினார்.
இதற்கிடையே உதவி பேராசிரியர் பிரேம்குமார் முன்பிணை கேட்டு, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இது தொடர்பாக மாவட்ட நீதிமன்றத்தில் முறையிட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் பிரேம்குமார் தரப்பு வழக்கறிஞர் மாசிலாமணி, முன்பிணை கேட்டு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி குமரகுரு முன்னிலையில் வெள்ளிக்கிழமை (ஏப். 22) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, பிரேம்குமாருக்கு முன்பிணை வழங்க மறுத்து, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஏப். 29ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து சூரமங்கலம் காவல்நிலைய காவல்துறையினர் பிரேம்குமாரை கைது செய்தனர்.
அவருக்கு சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு, சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.