தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. பகல் நேரங்களில் கடிக்கக்கூடிய ஏ.டி.எஸ். எஜிப்டி வகையான கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவும். இந்தக் காய்ச்சலால் உயிர் பிரியும் ஆபத்தும் உள்ளது.
புதுச்சேரியில் நேற்று ஒரே நாளில் கல்லூரி மாணவி ஒருவரும், இளம் பெண் ஒருவரும் பலியாகினர். இந்நிலையில், தமிழ்நாட்டில் கும்பகோணம் மற்றும் புதுக்கோட்டையில் இன்று பலருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் காய்ச்சல் பாதிப்பால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 26 நபர்களில் மூவருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதுக்கோட்டை மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஆறு பேருக்கு டெங்கு உறுதியாகி அவர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.