சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடராஜர் கோவில் தீட்சிதர்களைக் கண்டித்து திங்கள் கிழமை மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சியைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் ராஜூ தலைமை தாங்கினார்.
மாவட்டச் செயலாளர் பாலு, மாவட்ட பொருளாளர் மணிகண்டன், நிர்வாகி மணியரசன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் ராஜா, மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ் பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களைக் கண்டித்தும், கோவலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் உதவி ஆட்சியர் சுவேதாசுமனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தை தீட்சிதர்கள் மனம் போன போக்கில் செயல்படுத்தி வருகின்றனர். தமிழக அரசு இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். தனிச் சட்டம் இயற்றி முழுமையாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தால் தான் கோயில் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுப்பது, காவல்துறையினருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்வது, குழந்தை திருமணம் செய்வது குற்றம் என்று சொல்லியும் மீறி நடத்துவது, இதற்குப் பாஜக, ஆர் எஸ் எஸ் அமைப்புகள் கோயிலுக்குள் சென்று ஆதரவு தெரிவித்து போராட்டம் செய்ய அனுமதிப்பது, ஆளுநரிடம் பிரச்சனை குறித்து தப்பு தப்பாகச் சொல்லி ஆளுநர் தீட்சிதர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் சரியான தீர்வு ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் மிகப்பெரிய அளவில் அனைவரையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.