முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்க வலியுறுத்தி கூடலூரில் விவசாய சங்கத்தினர் 152 பொங்கல் வைத்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேனி மாவட்டம் கூடலூரில் மலைச்சாரல் விவசாயச் சங்கம், முல்லைப் பெரியாறு பாசன குடிநீர் பாதுகாப்பு சங்கம் உள்ளிட்ட விவசாய சங்கங்கள் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெரியாறு அணை அருகே உள்ள பேபி அணையை விரைவில் பலப்படுத்தி அணையில் 152 அடி நீர் தேக்க வேண்டும், அதுபோல் இடுக்கி மாவட்டத்திலுள்ள தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை மீண்டும் தேனி மாவட்டத்தினுடன் இணைக்க வேண்டும் உள்பட சில கோரிக்கைகளை முன்வைத்து கூடலூர் புது பேருந்து நிலையம் அருகே 152 பொங்கலைப் பெண்கள் வைத்தனர்.
இதில் வழக்கறிஞர் சங்க மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், முல்லைப் பெரியாறு பாசன நீர் பாதுகாப்பு சங்கத் தலைவர் சதீஷ் பாபு, விவசாயச் சங்க தலைவர் கொடி அரசன், பொருளாளர் ஜெயபால், துணைத் தலைவர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.