
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி புதுவாழ்வுத்திட்டப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி புதுக்கோட்டையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுவாழ்வுத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் சுமார் 1500 பேர் பணியாற்றி வந்துள்ளனர். கடந்த ஜூன் 2017 உடன் திட்டப்பணி நிறைவடைந்தது. சென்னை உயர்நிதிமன்றம் புதுவாழ்வுத்திட்ட பணியாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், பணி முடிந்து 10 மாதங்களைக் கடந்தும் மீண்டும் பணி வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக பணி வழங்க வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு புதுவாழ்வுத்திட்ட பணியாளர் நலச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.அன்புச்செல்வன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எம்.சந்திரசேகரன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, பொருளாளர் கே.குமரேசன் மற்றும் நிர்வாகிகள் பி.நடராஜன், கே.வி.அறிவழகன், நவமணி, காளிமுத்து, மெய்யப்பன் திருமுருகன் உள்ளிட்டோர் பேசினர்.