108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஜனவரி 8 ஆம் தேதி ஏன் வேலை நிறுத்தம் செய்கிறோம் என்பதை பொதுமக்களிடம் விளக்கி கையெழுத்து இயக்கம் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பணிபுரியும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அறந்தாங்கி பேருந்து நிலையம் மற்றும் நகரில் பல்வேறு இடங்களில் வழங்கினர். இதில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
அந்த கோரிக்கை, 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு சட்டவிரோத 12 மணி நேர வேலை வழங்குவதை நிறுத்தி 8 மணி நேர வேலையை வழங்கவேண்டும். சட்ட விரோதமாக பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் தமிழக முழுவதும் ஆம்புலன்ஸ்களை 24×7 என முழுமையாக தங்கு தடையின்றி இயக்க வேண்டும். அதற்குத் தேவையான தொழிலாளர்களை உடனடியாக வேலைக்கு அமர்த்த வேண்டும் .
அறந்தாங்கி சுப்பிரமணியபுரம் அரசு மருத்துவமனைக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 108 ஆம்புலன்ஸை வழங்க வேண்டும். பணியாளர்கள் பற்றாக்குறையால் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படுவதால் பாதிக்கப்படும் பொதுமக்களின் நிலை கருதி அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு பணியிடத்தில் கழிவறையுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடத்தை அமைத்து தரவேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களை சந்தித்து கோரிக்கையை விளக்கியதுடன், கோரிக்கை துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் 108 தொழிலாளர் COITU மாநில செயலாளர் பாஸ்கரன் தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் வீரமுத்து, மாநில காரிய கமிட்டி உறுப்பினர் அழகர் ரெனிரூபன், ஹென்றி டேனியல், ஐஸ்வர்யா , சாக்ரடீஸ், பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.