"தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதலைத் தடுத்து நிறுத்த, இலங்கை அரசிடம் ஒன்றிய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்" என்று தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான ஏ.கே.எஸ். விஜயன் தெரிவித்துள்ளார்.
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலகளாவிய ஏற்றுமதியாளருக்கான சிறப்பு கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆட்சியர் அருண் தம்புராஜ், நாகை எம்.எல்.ஏ. ஆளூர் ஷாநவாஸ் மற்றும் ஏற்றுமதியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், "தமிழக மீனவர்கள், இலங்கை கடற்கொள்ளையர்களால் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய, இலங்கை இருநாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை மூலமே இதுபோன்ற தாக்குதல் சம்பவங்களுக்குத் தீர்வு எட்டமுடியும். முன்னாள் முதல்வர் கலைஞர் தொடங்கிவைத்த இந்திய - இலங்கை இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கி, அதன் மூலம் தீர்வு காண ஒன்றிய அரசு விரைவில் முயற்சி எடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசு விவசாயிகளை முழுமையாக முடக்கும்விதமாக கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. வேளாண் சட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசு மாற்றான்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டுவருகிறது"என்றார்.