காங்கிரஸ் கட்சியில் நேற்று வரை இருந்துவந்த நடிகை குஷ்பு பாஜகவில் சேரப்போவதாக அடிக்கடி தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் அவர் இன்று பாஜகவில் இணைவதாக தகவல் வெளியான நிலையில், இன்று காலை காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதனை அடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு அவர் கடிதம் எழுதி அனுப்பினார். இந்நிலையில் எதிர்பார்த்த மாதிரியே பாஜகவில் குஷ்பு தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்ட அவர், அடுத்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில், தனக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவருக்கு தி.மு.க அப்படியான வாய்ப்பை வழங்கவில்லை. இதனால் மன வருத்தத்தில் இருந்துவந்த அவர், சில ஆண்டுகள் இடைவெளியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்கு செய்தித் தொடர்பாளர் என்ற முக்கியப் பொறுப்பை பெற்று பணியாற்றி வந்தவர், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சீட் கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்தார். ஆனாலும், அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் அவர் வருத்ததில் இருந்ததாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது அவர் பாஜகவில் இணைந்துள்ளார். அவருக்கு மாநில அளவில் பொறுப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.