தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து உயிர்பலிகளும் அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்று மூச்சுத்திணறலோடு வரும் நோயாளிகளை திருப்பி அனுப்பும் அவலநிலையும் தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் பாலகிருஷ்ணன் என்பவருக்கு தஞ்சை மாவட்டத்தில் ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காததால் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தும் பலனில்லை. அதேபோல நேற்று புதுக்கோட்டை மாவட்டம் சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற இளைஞருக்கு கோவையில் வேலை செய்த இடத்தில் கரோனா பெருந் தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. கோவை மருத்துவமனைகளில் படுக்கையின்றி ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வந்து சிகிச்சை தொடங்கிய நிலையில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.
இப்படி பலரும் ஆக்சிஜன் படுக்கை வசதி கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மட்டுமின்றி திருச்சி, தஞ்சை, சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதிய மருத்துவப் பணியாளர்கள் இல்லாததால் கரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் விரைந்து மருத்துவப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ''புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிக அளவு கரோனா பெருந்தொற்றுக்கு ஆளாகி வருவதால் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்படுகிறது. ஆகவே கீழ்கண்டவாறு பணியாளர்களை விரைந்து நியமிக்க கேட்டுக்கொள்கிறேன்.
அதாவது மெடிக்கல் ஆஃபிசர் 50, செவிலியர்கள் 100, லேப் டெக்னீசியன் 20, டேட்டா என்டரி ஆபரேட்டர் 10, மேலும் டெக்னீசியன்கள், இதர பணியாளர்கள் 60 வரை நியமனம் செய்ய வேண்டும்'' எனக் கேட்டுள்ளார்.