ஒவ்வொரு தம்பதியும் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் பேசியிருப்பது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
நாக்பூர் பகுதியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “மக்கள்தொகை குறைவது கவலைக்குரிய விஷயம். ஏனென்றால், ஒரு சமூகத்தில் கருவுறுதல் விகிதம் 2.1 க்கு கீழே சென்றால், அந்த சமூகம் தானாகவே அழிந்துவிடும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகிறது. 1998 அல்லது 2002 இல் முடிவு செய்யப்பட்ட இந்தியாவின் மக்கள்தொகைக் கொள்கையில் மொத்த கருவுறுதல் விகிதம் 2.1க்குக் குறைவாக இருக்கக்கூடாது என்பதை தெளிவாக வலியுறுத்துகிறது.
மக்கள் தொகை கருவுறுதல் விகிதத்தில் நமக்கு இரண்டுக்கு மேல் தேவை. அதைத்தான் மக்கள்தொகை அறிவியல் சொல்கிறது. இந்த எண்ணிக்கை முக்கியமானது, ஏனென்றால், சமூகம் வாழ வேண்டும். எனவே, ஒவ்வொரு தம்பதியும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்று கொள்ள வேண்டும். மக்கள் தொகை அதிகமாக இருந்தால் சுமை அதிகமாகும் என்பது உண்மைதான். மக்கள் தொகையை முறையாகப் பயன்படுத்தினால் அது வளமாகும். 50 ஆண்டுகளுக்குப் பிறகு நம் நாட்டில் எத்தனை பேருக்கு உணவளித்து ஆதரவளிக்க முடியும் என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு புவியியல் எல்லைகளில் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
மக்கள்தொகைக் கட்டுப்பாடு மற்றும் மத அடிப்படையிலான மக்கள்தொகை சமநிலை ஆகியவை இனி புறக்கணிக்கப்பட முடியாத ஒரு முக்கியமான விஷயமாகும். எனவே ஒரு விரிவான மக்கள்தொகைக் கொள்கை கொண்டு வரப்பட வேண்டும். அது அனைவருக்கும் சமமாக பொருந்த வேண்டும். அப்போதுதான் மக்கள் தொகைக் கட்டுப்பாடு தொடர்பான விதிகள் பலனைத் தரும். எல்லா இடங்களிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும். அனைத்து துறைகளிலும் முடிவெடுக்க பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும். ஆண்களால் செய்ய முடியாத பல வேலைகளை பெண்களால் செய்ய முடியும்” என்று கூறினார்.