விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று (04.12.2021) ஒருநாள் மட்டும் விடுமுறை என அறிவித்துள்ளார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி.
விடுமுறை அறிவிப்பை ஆட்சியர் தாமதமாக வெளியிட்டதால், மாணவர்கள் பலரும் மழை அவஸ்தையிலும் பள்ளி சென்றுவிட்டனர். அரசுப் பள்ளிகள், ஆட்சியரின் உத்தரவுப்படி விடுமுறை அளித்து மாணவர்களைத் திருப்பி அனுப்பிய நிலையில், தனியார் பள்ளிகள் பலவும் விடுமுறை அறிவிப்பைக் கண்டுகொள்ளாமல் இயங்கிவருகின்றன. அதே நேரத்தில், குழப்ப மனநிலையிலேயே மாணவர்களும் ஆசிரியர்களும் அப்பள்ளிகளில் உள்ளனர்.
கனமழை விடுமுறை அறிவிப்பானது, அந்தந்த கால சூழ்நிலைக்கேற்ப மாவட்ட ஆட்சியரே முடிவெடுத்து தெரிவிப்பதாகும். விருதுநகரில் பெரிதாக மழை இல்லாததால், மாவட்டத்தின் மற்ற ஊர்களிலும் மழை பெய்யவில்லை என்று ஆட்சியர் நினைத்துவிட்டார் போலும் எனப் பெற்றோர் தரப்பு முணுமுணுக்கிறது.
சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதிகளில் அதிகாலையில் இருந்தே மழை பெய்யும் விபரத்தை ஆட்சியர் அறிந்திடாத காரணத்தாலேயே, விடுமுறை அறிவிப்பில் தாமதம் என அரசுத்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஆக்டிவான கலெக்டர் என்று பெயரெடுத்துவரும் ஆட்சியர் மேகநாத ரெட்டி, இன்றைய கனமழை விடுமுறையைத் தாமதமாக அறிவித்ததால், விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார்.