தேர்த் திருவிழாக்களின் போது உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலியான நிலையில், திருவிழாக்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பது தொடர்பாக தமிழக அரசு, 10 துறைகளுக்கு பல்வேறு விதிமுறைகளை வகுத்து 2012 -ம் ஆண்டு அரசாணை பிறப்பித்தது.
2012 -ல் விதிகள் உருவாக்கப்பட்டாலும், அந்த விதிகள் முறையாக கடைப்பிடிக்கப்படாததால், நாமக்கல் மாவட்டம் - குமாரபாளையம் காளியம்மன் கோவில் மற்றும் எடப்பாடி செல்லாண்டியம்மன் கோவில் தேர்த் திருவிழாக்களின்போதும் மரணங்கள் நிகழ்ந்துள்ளதால், இந்த விதிகளை அமல்படுத்த உத்தரவிடக் கோரி சேலத்தைச் சேர்ந்த ஏ.ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், 2012-ம் ஆண்டு தமிழக அரசு உருவாக்கிய விதிகளை முறையாக அமல்படுத்த வேண்டுமென்ற தனது மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, தேர்த் திருவிழாக்களின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் எவ்வாறு அமல்படுத்தபடுகிறது என்பதை அறிக்கையாக பிப்ரவரி 23-ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.