அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், எடப்பாடி தரப்பு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவில் போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்டவிரோதமாகப் பணம் வசூலிப்பதாக முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி. பழனிசாமிக்கு எதிராக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தனக்குக் கலங்கத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல்களைத் தெரிவித்திருப்பதாக கே.சி. பழனிசாமி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அந்த அவதூறு வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி. பழனிசாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது அனைத்து ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவதூறு வழக்கைத் தள்ளுபடி செய்வது தவறானது என்ற வாதத்தை கே.சி. பழனிசாமி தரப்பு வைத்தது. அதனைத் தொடர்ந்து, இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்க வேண்டும் எனக் கூறி வழக்கை நவ.8 ஆம் தேதிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் ஒத்திவைத்தார்.