திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா இன்று ( 14.11.2018 ) ந்தேதி விடியற்காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த கொடியேற்ற விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். கொடியேற்ற தினத்தன்றே காவல்துறை தங்களது கெடுபிடியை தொடங்கியது, கோயிலுக்கு வந்த பக்தர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கொடியேற்றத்துடன் துவங்கிய திருவிழாவில் இன்று காலையும், இரவும் சுவாமி அலங்கார வாகனத்தில் மாடவீதியில் வீதியுலா வந்தன. கடந்த ஆண்டு வரை சுவாமி வீதியுலா வரும்போது சுவாமிகளுக்கு முன்பு ருக்கு என்கிற கோயில் யானை ஆடி அசைந்து மாடவீதியில் வரும். இந்த யானைக்கு உணவு வழங்க பலர் முண்டியடிப்பர், குழந்தைகளுக்கு அதனை காட்டி மகிழ்வர் பெற்றோர்.
சில மாதங்களுக்கு முன்பு ருக்கு யானை கோயில் மதில் சுவற்றில் முட்டி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மரணத்தை தழுவியது. நாய்கள் துரத்தியதால் பயந்துப்போய் ஓடும்போது சுவற்றிலும், இரும்பு கம்பியிலும் மோதி இறந்துவிட்டது என்றார்கள் கோயில் அதிகாரிகளும், ஊழியர்களும்.
யானை, நாய்களுக்கெல்லாம் பயப்படும்மா என சர்ச்சை எழுந்தது. ஆனால், அதற்கு யாரும் சரியான பதில் சொல்லாமல் யானை ருக்குவை புதைத்ததை போல உண்மையையும் சேர்த்து புதைத்துவிட்டனர்.
இந்நிலையில் இறந்த யானைக்கு பதிலாக புதிய யானை வாங்கி கோயிலில் வைத்து பராமரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலதரப்பிலும் இருந்து எழுந்தது. இதுவரை இதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. அறநிலையத்துறையும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆண்டு தொடங்கியுள்ள கார்த்திகை தீபத்திருவிழாவில் ருக்கு யானை இல்லாமல் திருவிழா நடப்பதால் பலரும் ருக்குவை நினைத்து கண்ணீர் வடிப்பதோடு, மாடவீதியில் ருக்குவை பற்றி ஏக்கத்துடன் பேசி செல்கின்றனர்.
தென்னிந்தியாவில் பிரபலமான அண்ணாமலையார் கோயிலுக்கு விரைவில் யானையை வாங்கி கோயிலில் வைத்து பராமரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பல தரப்பிலும்மிருந்து எழுகிறது. செய்யும்மா அறநிலையத்துறை ?.