2019-20 பட்ஜெட் தாக்கலுக்கு பின் இரண்டு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று நடந்த தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வறுமை கோட்டிற்கு கீழுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும். இதற்கு 1200 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என அறிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் 60 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் எனவும் எடப்பாடி தெரிவித்தார்.
இன்று பட்ஜெட் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் திமுக எம்எல்ஏ பொன்முடி இந்த 2000 ரூபாய் சிறப்பு நிதி தேர்தலை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. 2000 ரூபாய் அறிவித்ததில் திமுகவிற்கு மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் ஏன் இந்த அறிவிப்பு பட்ஜெட் அறிவிப்பில் வரவில்லை என கூறினார். அதற்கு பதிலளித்த எடப்பாடி இது எந்த கட்சிக்குமான அறிவிப்பு அல்ல அனைத்து மக்களுக்குமான திட்டம் எனக்கூறினார். மேலும் அமைச்சர் தங்கமணி பேசுகையில் வறட்சி காரணமாகத்தான் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு 2000 ரூபாய் சிறப்புநிதி வழங்கப்படுகிறது என கூறினார். இதனால் சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.