Skip to main content

மாணவி அனிதா மரணம் - நீட் நிரந்தர விலக்கு குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
மாணவி அனிதா மரணம் - நீட் நிரந்தர விலக்கு குறித்து
அனைத்துக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம்


 
மாணவி அனிதா மரணம் - “நீட்” நிரந்தர விலக்கு குறித்து ஆலோசிக்க, “அனைத்துக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம்” நேற்று (4-9-2017), மாலை 5.00 மணி அளவில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள ‘முரசொலிமாறன் கூட்ட அரங்கில்’ நடைபெற்றது.
 
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு :-
 
இரங்கல் தீர்மானம் :

நீட் கொடூரத்திற்குப் உயிர்ப்பலியான மாணவி அனிதாவுக்கு இரங்கலும் வீரவணக்கமும்.
 
மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் தனது மருத்துவக் கல்விக் கனவு பொய்த்துப் போனதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மரணத்திற்கு இந்த கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரை இழந்து வாடும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் அனுதாபத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
மாணவி அனிதாவின் உயிர்த் தியாகம் சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற விழிப்புணர்வை, மாணவ சமுதாயத்திடமும் - தமிழக மக்களிடையேயும் விதைத்திருக்கிறது. அனிதாவுக்கு இந்தக் கூட்டம் வீரவணக்கம் செலுத்துகிறது.
 
தீர்மானம் - 1 :

மாணவி அனிதாவின் உயிர்ப் பலிக்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.
 
அரியலூர் மாவட்டத்தில் உள்ள குழுமூர் குக்கிராமத்தில் பிறந்து,  மாநில பாடத்திட்டத்தின் கீழ் நம்பிக்கையுடன் படித்து பிளஸ்-2 இறுதி தேர்வில் 1200-க்கு 1176 மதிப்பெண்கள் பெற்ற மாணவி அனிதா மருத்துவக் கல்வியில் சேர்வதற்கான 196.5 சதவீதம் கட் ஆப் மார்க் பெற்றிருந்தார். நீட் தேர்வு வலுக்கட்டாயமாக தமிழகத்தில் திணிக்கப்படாமல் இருந்திருந்தால் அனிதா இந்த வருடம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, மருத்துவ மாணவியாக நம்மிடையே இந்நேரம் இருந்திருப்பார். ஆனால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால், தன் லட்சியத்தை தொட முடியாத சோகத்தில் நிகழ்ந்த அனிதாவின் மரணத்தை தற்கொலை என்று கருதுவதை விட மத்திய, மாநில அரசுகள் தங்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் மூலம் நடத்திய கொலை என்றே இந்தக் கூட்டம் எண்ணுகிறது. மாணவி அனிதா மட்டுமின்றி, மாநில பாடத்திட்டத்தில் படித்த 4.2 லட்சம் மாணவ மாணவிகளின் எதிர்காலத்துடன் கடைசி வரை விபரீத விளையாட்டு நடத்தி, அவர்களையும், அவர்களது பெற்றோரையும் துயரத்தில் ஆழ்த்தி விட்ட மத்திய பா.ஜ.க. அரசுக்கும், மாநில அதிமுக அரசுக்கும் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நீட் தேர்வைப் பொறுத்தமட்டில் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் பாராளுமன்ற நிலைக்குழு தனது 92வது அறிக்கையில், “விருப்பம் இல்லாத மாநிலங்களை விட்டு விட்டு மற்ற மாநிலங்களில் நீட் தேர்வை அமல்படுத்தலாம்” என்று அறிக்கை அளித்தும், நீட் தேர்வு தமிழகத்தில் திணிக்கப்பட்டது. “நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்” என்று வலியுறுத்தி வந்த தமிழகத்தில் மத்திய பா.ஜ.க. அரசின் ஆணவப் போக்கால் நீட் தேர்வு திட்டமிட்டு வம்படியாகப் திணிக்கப்பட்டு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு கேள்வித்தாள் தயாரித்து, தேர்வு எழுத வந்த மாணவ-மாணவியரை கெடுபிடிகளால் அவமானத்திற்குள்ளாக்கி, மனரீதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் 1.2.2017 அன்று இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு அனுப்பப்பட்டும், அந்த மசோதாக்களை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கே அனுப்பாமல் கிடப்பில் போட்டார்கள். 

அதன் பிறகு மாணவர்களின் போராட்டத்தால் “மாநில அரசு ஒரு வருடத்திற்கு மட்டும் விதிவிலக்கு கோரி அவசரச் சட்டம் கொண்டு வந்தால் அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கும்” என்று இன்றைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சராகியிருக்கும் நிர்மலா சீத்தாராமன் அறிவித்து நம்பிக்கை கொடுத்தார். அதன்படி நிறைவேற்றப்பட்ட மாநில அரசின் அவசரச் சட்டத்திற்கும் அனுமதி வழங்காமல் கடைசி வரை மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றியது மத்திய அரசு. மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் தங்களின் பதவியை, அமைச்சரவையை காப்பாற்றிக் கொள்ளும் பேரத்தில் ஈடுபட்டார்களே தவிர, “நல்ல செய்தி வரும்” என்று கடைசி நேரம் வரை நம்பியிருந்த மாணவர்களை ஏமாற்றி விட்டார்கள். மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள அதிமுக அரசும் இணைந்து நடத்திய இந்த நாடகத்தின் விளைவாக தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களும், நகர்புறத்தில் உள்ள ஏழை மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் தங்கள் எதிர்கால கனவுகளை தொலைத்து விட்டு தடுமாறி நிற்கும் அவல நிலைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். 

வெளிமாநில மாணவர்கள் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் “பொய்யான இருப்பிட சான்றிதழ்” கொடுத்து தமிழக மாணவர்களின் கணிசமான இடங்களை ஆக்கிரமித்து கொண்டு விட்டதால், இனி கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உரிய மருத்துவர்கள் கிடைப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்கு முழுமுதற் காரணம் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்திற்கு மட்டும் “நீட்” தேர்விலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று எடுத்த நிலைபாடுதான். எனவே, மாணவி அனிதாவின் உயிரிழப்புக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களும் - “நீட்” தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற, உரிய அழுத்தம் அளிக்கத் தவறிய தமிழக முதல்வர் திரு. எடப்பாடி  பழனிசாமி அவர்களும் பொறுப்பேற்க வேண்டுமென்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
 
 தீர்மானம் - 2 :
 
மத்திய - மாநில அரசுகளை கண்டித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்
 
மாநில அதிகார வரம்பிற்குள் இருந்த கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி, கல்வி தொடர்பாக எஞ்சியிருக்கும் மாநில அதிகாரங்களை பறிக்கும் முயற்சியில் தொடர்ந்து மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. சமூக நீதியின் தொட்டிலாக இருக்கும் தமிழகத்தில் “அகில இந்திய அளவில் நீட் தேர்வு” என்ற புதிய சதித்திட்டத்தின் மூலம், சமூக நீதிக் கொள்கையை சீர்குலைக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் முயற்சி கண்டு தமிழகமே எரிமலையாக குமுறிக் கொண்டிருப்பதை மத்திய - மாநில அரசுகள் உணர மறுக்கின்றன.  

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களை உதாசீனப்படுத்தியதன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதித்துள்ள மத்திய பா.ஜ.க. அரசின் போக்கு “கூட்டாட்சி” தத்துவத்திற்கே வேட்டு வைக்கும் முயற்சி மட்டுமல்ல- மாநில உரிமைகளுக்கு குழி பறிக்கும் வேலையும் ஆகும். மாநில கல்வி திட்டத்தின் கீழ் படித்த தமிழகத்தை சார்ந்த லட்சக்கணக்கானோர் நாட்டின் முன்னேற்றத்திற்காக பணியாற்றிக் கொண்டிருக்கின்ற நிலையில், “தமிழக கல்வியில் தரமில்லை” என்று மனுதர்ம கண்ணோட்டத்தோடு மத்திய பா.ஜ.க. ஆட்சியில் இருப்போர்  திட்டமிட்ட பொய்ப் பிரசாரத்தை மேற்கொண்டு வருவதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

ஒரு மாநிலத்தில் தரமான கல்வியை வழங்குவது என்பது மாநில அரசின் உரிமை என்பதையும் அது குறித்த சட்டங்களை மாநில  அரசே இயற்ற வேண்டும் என்பதையும் மத்திய அரசு உணர்ந்து, உடனடியாக கல்வியை மீண்டும் “மாநில பட்டியலில்” சேர்க்க வேண்டும் என்று இந்த கூட்டம் அழுத்தமாகவும், ஆணித்தரமாகவும் வலியுறுத்துகிறது.

இந்நிலையில், அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய- மாநில அரசுகளை கண்டித்தும், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிக்கவும், கல்வியை மாநில பட்டியலில் சேர்க்கவும் உரிய அரசியல் சட்ட திருத்தங்களை மத்திய அரசு உடனே கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் முதற் கட்டமாக, செப்டம்பர் 8ஆம்  தேதி வெள்ளிக்கிழமை திருச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் “மாபெரும் பொதுக்கூட்டம்” நடத்துவது என்று இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.
 
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.
 
மு.க.ஸ்டாலின் 
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
 
ஆர்.எஸ். பாரதி, எம்.பி., 
அமைப்புச் செயலாளர், தி.மு.க.,
 
சு. திருநாவுக்கரசர் 
தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
 
கே.ஆர். இராமசாமி, எம்.எல்.ஏ.,
சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர்
 
ஜி. ராமகிருஷ்ணன் 
செயலாளர், 
தமிழ் மாநில குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,
 
பாலகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.,
மத்தியக்குழு உறுப்பினர், 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
 
ஆர். முத்தரசன் 
செயலாளர், 
தமிழ் மாநில குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,
 
மு. வீரபாண்டியன்,
துணைச் செயலாளர், 
தமிழ் மாநிலக்குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
 
தொல். திருமாவளவன் 
தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
 
ரவிக்குமார்,
பொதுச்செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
 
மானமிகு ஆசிரியர் கி.வீரமணி 
தலைவர், திராவிடர் கழகம்
 
கலி. பூங்குன்றன் 
துணைத் தலைவர், திராவிடர் கழகம்,
 
பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் 
தலைவர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,
 
கே.எம். நிஜாமுதீன்,
மாநிலச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்,
 
எம்.எச். ஜவாகிருல்லா 
மனிதநேய மக்கள் கட்சி

குணங்குடி அனிபா
தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர், 
மனிதநேய மக்கள் கட்சி

சார்ந்த செய்திகள்