அண்மையில் சில நாட்களுக்கு முன்பு மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தில் இறந்தும், மயங்கிய நிலையிலும் மீன்கள் கரை ஒதுங்கியது அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. நீர்வரத்து இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியாக குறைந்துள்ள நிலையில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது கோடை வெயிலின் தாக்கமா அல்லது ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் உயிரிழக்கின்றனவா அல்லது வேதிப் பொருட்கள் கலந்து அதன் மூலம் ஏற்பட்ட பக்க விளைவு காரணமாக மீன்கள் உயிரிழக்கின்றனவா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள கே.ஆர்.பி அணையிலும் அதேபோல மீன்கள் கொத்துக் கொத்தாக இறந்து கிடப்பது அந்தப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் மூலம் துர்நாற்றம் வீசுவதால் பல்வேறு நோய் பரவும் அபாயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அந்தப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட கே.ஆர்.பி அணையில் ஒப்பந்த முறைப்படி மீன்கள் வளர்க்கப்பட்டு பிடித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் வறட்சியின் காரணமாக 38 அடிக்கு கீழ் சென்றுள்ளது. தொடர்ந்து தென்பெண்ணை மற்றும் பெங்களூர் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கடந்த சில நாட்களாக கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருந்தது.
இந்த சூழலில் அணையில் உள்ள அனைத்து மீன்களும் செத்து குவியல் குவியிலாக மிதப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் ரசாயனங்கள் அணையில் திறந்து விடப்படுவதாக குற்றச்சாட்டு முன்னதாக எழுந்திருந்தது. ஏற்கெனவே ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நுரை பொங்கிய நீர் ஓடியது தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்தது. தற்பொழுது அந்த நீர் தென்பெண்ணை ஆற்றின் வழியாக கே.ஆர்.பி அணைக்கு வந்ததால் ஏற்பட்ட ரசாயன மாற்றம்தான் மீன்கள் குவியலாக செத்து மிதக்க காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.