Skip to main content

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை; மன்னிப்பு கேட்ட டிடி தமிழ் தொலைக்காட்சி!

Published on 18/10/2024 | Edited on 18/10/2024
DD Tamil Television apologized for Tamil Thai Greeting Controversy

சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களையொட்டி கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி இன்று (18.10.2024) நடைபெறும் இந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சம்பவம் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தி மாதம் கொண்டாட்டங்களின்  நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். 

இதனை தொடர்ந்து, சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி தின விழா இன்று (18-10-24) நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும் மக்களை கொண்டு தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் கூறி விமர்சனம் செய்திருந்தார். இந்த விழாவில் பங்கேற்ற ஆளுநர் உள்பட அனைவரும், எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது ‘திராவிடம்’ என்ற வார்த்தையை பாடாததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடு’ என்ற வார்த்தையை சரியாக பாடாமல் அடுத்த வரியான ‘தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே’ என்று பாடினர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக டிடி தமிழ் தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டுள்ளது. இது குறித்து டிடி தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை தூர்தர்ஷன் இன்று நடத்திய இந்தி மாத நிறைவு விழா மற்றும் பொன் விழாவின் ஒருபகுதியாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். தமிழ் தாய் வாழ்த்து பாடலின் போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டு விட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தமிழையோ அல்லது தமிழ் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இது தொடர்பாக, தமிழக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்