திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு 1990ம் வருடம் வளர்ச்சி நிர்வாகவியல் மூன்று ஆண்டுகள் படித்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முதன்முறையாக நடைபெற்றது. திருவண்ணாமலை, சிவகாசி, கோவை, சென்னை, புதுச்சேரி, திண்டுக்கல், சின்னாளபட்டி ஆகிய இடங்களில் அரசு மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிகின்ற மாணவர்கள் படித்து முடித்த பின்பு முதன் முறையாக காந்திகிராமம் பல்கலைக்கழத்திற்கு வந்தனர். அவர்களை பல்கலை வளர்ச்சி நிர்வாகவியல் தலைவர் பேராசிரியர் ரகுபதி வரவேற்பு வாழ்த்தினார்.
இதனை தொடர்ந்து மாணவர்கள் தாங்கள் படிக்கும்போது காந்திகிராமம் பல்கலைகழகத்தில் ஏற்பட்ட நெகிழ்ச்சியான தருணங்கள், நண்பர்களின் பாசங்களை குறித்து ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர். அதன்பின்னர் தாங்கள் படித்த வகுப்பறை, தங்கியிருந்த விடுதி போன்றவற்றை பார்த்தபோது பழைய ஞாபகங்களை நினைத்து ஒருசிலர் கண்ணீர் விட்டனர். அதன்பின்னர் மாணவர்கள் பின் ஒவ்வொரு ஆண்டும் வருடத்திற்கு ஒரு நாள் காந்திகிராமம் பல்கலைக்கழத்திற்கு வந்து சந்திக்க வேண்டும் என முடிவு செய்தனர். அதுபோல வரும் வருடங்களில் தங்கள் குடும்பத்தையும் அழைத்து வந்து அவர்களையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்தனர்.
தாங்கள் படித்த பல்கலைக்கழத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக பல்கலைகழகத்தில் படிக்கும் போது கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி செய்ய வேண்டும் என்றும், பழைய மாணவர்களின் குழந்தைகள் படிப்புக்காக நலநிதி ஒன்றை ஏற்படுத்தவும் முடிவு செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னாள் மாணவரும், சின்னாளபட்டி தினத்தந்தி மாலை மலர் நிருபருமான சேசுராஜ், சுப்பிரமணி, சிவக்குமார், லட்சுமணன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். மாணவர்கள் அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு மாலையில் மாணவர்கள் சந்தோசத்துடன் பிரியாவிடை பெற்று சென்றனர்!