தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 19 ஆம் தேதி (19.02.2024) தாக்கல் செய்தார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். அதில், “அரசு நகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் மகளிருக்கான 'விடியல் பயணம்’ திட்டம் நீலகிரி, கொடைக்கானல், வால்பாறை போன்ற மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவிக்கையில், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் பிப்ரவரி 25 ஆம் தேதி உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்தில் மலைப்பகுதியில் மகளிருக்கான விடியல் பயணத்தினை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுடன் அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், திமுகவினர், தொ.மு.ச நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.