இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதன்படி, முதற்கட்டமாகக் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம், நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் என வாக்குப்பதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. இறுதி மற்றும் 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
அதே சமயம் பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக இன்று (30.05.2024) தமிழகம் வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தமிழகம் வருகை புரிந்துள்ளார். கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக மூன்று நாட்கள் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபடப் போவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில், இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரம் வருகை புரிந்துள்ள பிரதமர் மோடி அங்கிருந்து தமிழகம் வர இருக்கிறார்.
இத்தகைய சூழலில்தான் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து இன்று மதியம் தனி விமானத்தில் புறப்பட்டு அவர், திருச்சி விமான நிலையத்திற்குப் பிற்பகல் 3 மணிக்கு வருகை புரிந்தார். அதன் பின்னர் அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் உள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் திருமயம் கோட்டை சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை புரிந்து வழிபாடு செய்தார்.
அதனைத் தொடர்ந்து பழமை வாய்ந்த ராஜராஜேஸ்வரி சத்தியகிரீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தார். இந்நிலையில் திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் மத்திய அமைச்சர் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். அப்போது கோட்டை பைரவர் கோயில் அருகே காத்திருந்த பாஜக தொண்டர்கள் அமித் ஷாவைக் கண்டதும் ஆரவாரம் செய்தனர். அதன் பின்னர் அங்கிருந்து ஆந்திராவுக்கு செல்ல இருக்கிறார்.