தமிழகத்தின் சீனியர் அமைச்சரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான செங்கோட்டையன் இன்று அவரது தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் மக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் ஒன்றை மொடச்சூர் என்ற பகுதியில் நடத்தினார்.
அப்போது பலர் தங்களுக்கான குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதைப் பெற்றுக்கொண்ட செங்கோட்டையன் இந்த குறைதீர் கூட்டத்தில் கலந்து கொண்டு மனு கொடுத்தவர்களுக்கு 15 நாட்களில் பதில் வரும் எனக்கூறியவர். தமிழகத்தில் 9 கல்லூரிகளில் 7,500 மாணவர்களுக்கு 35 நாட்கள் நீட் பயிற்சி கொடுக்கப்படும். அதேபோல் தமிழகத்தில் உள்ள எல்கேஜி, யுகேஜி மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதை நாளை திங்கட்கிழமை காலை முதல்வர் முறையாக அறிவிப்பார் என கூறியவர்,
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, முன்பெல்லாம் அரசை தேடி மக்கள் வருவார்கள் ஆனால் இப்போது அதிகாரிகள் மக்களை தேடிச்சென்று குறைகளை கேட்டு அதை சரி செய்து வருகிறார்கள். இந்த நிலையை நமது முதல்வர் உருவாக்கியுள்ளார். அதேபோல் பள்ளிக்கல்வித்துறை விளையாட்டுத் துறைக்கும் ஏராளமான நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என கூறிக்கொண்டே வர, சரிங்க அண்ணா.., இப்ப நடிகர் ரஜினி ஒரு அறிவிப்பு கொடுத்து இருக்கிறார். அவரது அறிவிப்பு தமிழ் நாட்டில் புரட்சி உருவாகும் என்று அதைப்பற்றி நீங்க என்ன சொல்றீங்க.. என நிருபர்கள் கேட்க, அதை காதில் வாங்காதது போல் இப்போது புரட்சித்தலைவியின் ஆசி பெற்ற ஆட்சிதான் நடந்து கொண்டிருக்கிறது.. வணக்கம். எனக் கூறி விட்டுச் சென்றார்.
இதைக் கேட்ட கட்சியினர் அண்ணன் செங்கோட்டையன் அரசியல் கேள்விகளை தவிர்ப்பதில் அசராத மனிதராக இருக்கிறார் என கிண்டலடித்தனர்.