சென்னை நுங்கம்பாக்கம் புஷ்பா நகரைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். பரத நாட்டிய கலைஞரான இவர், கடந்த 10ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை தரிசிக்க கோவிலுக்குச் சென்றபோது, அவரை ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன் கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்து, பிறப்பின் அடிப்படையிலும், மதத்தின் பெயராலும் இழிவுபடுத்தியதாக புகார் கூறியிருந்தார்.
இது தொடர்பாக கோவில் பணியாளர்களிடம் விசாரித்தபோது, “கோவில் பழக்க வழக்கத்தின்படி மாற்று மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சுவாமியை ஏற்றுக்கொண்டு, சுவாமியின் மீது பற்றுதல் மற்றும் நம்பிக்கை கொண்டு இந்துமத கலாச்சார உடையணிந்து வரும் பக்தர்கள் சுவாமியைத் தரிசனம் செய்யலாம்.
ரெங்கராஜன் நரசிம்மன் பலமுறை கோவில் நிர்வாகத்துக்கு எதிராக வேண்டுமென்றே பல்வேறு இடையூறுகளை அளித்துவந்துள்ளார். இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் பலமுறை புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 10ஆம் தேதி ஜாகீர் உசேன் மீது நடந்த வன்ம செயல்கள் குறித்து சி.சி.டி.வி. கேமரா பதிவுகளும் குறுந்தகட்டில் பதிவுசெய்து அனுப்பப்பட்டுள்ளது” என கூறினர்.