Skip to main content

நிரம்பியது அணை...! தமிழகத்திற்கு தண்ணீர் பிரச்சனை இவ்வருடம் இல்லை...

Published on 13/08/2020 | Edited on 13/08/2020
Bhavanisagar Erode

 

தமிழகத்தில் உள்ள ஒரு அணை முழுமையாக நிரம்பி விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அது ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணைதான். இந்த அணை நீர் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் என மூன்று மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 

 

தமிழ்நாட்டில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக பவானிசாகர் அணை விளங்குகிறது. இந்த அணையின் மொத்த உயரம் 105 அடியாகும். 32.8 டி.எம்.சி. நீர் இருப்பு கொள்ளளவு கொண்டதாகும். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இதனால் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

 

இதன் காரணமாகவே அணைக்கு நீர்வரத்துத் தொடர்ந்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது. இன்று காலை முதல் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. இன்று காலை 7 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.10 அடியாகவும் மாலை 6 மணி நிலவரப்படி 101.89 அடியாகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு ஐயாயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 700 கன அடியும் காளிங்கராயன் பாசனத்திற்காக 500 கன அடியும் என மொத்தம் 1,200 கனஅடி வெளியேற்றப்பட்டு வருகிறது பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 105 அடி என்றாலும் இதில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதன்படி இன்று இரவுக்குள் 102 அடியை எட்டிவிடும். இதனால் பவானிசாகர் அணைக்கு வரும் மொத்த நீரும் வெளியேற்றப்பட இருக்கிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

 

இதற்கிடையே கீழ்பவானி பாசனத்திற்காக 14 ஆம் தேதி நீர் திறக்கப்படுகிறது. அணை நிரம்பி விட்டதால் மூன்று வாய்க்கால் பாசனத்திற்கு திறப்பது போக மீதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு அது பவானி கூடுதுறை எனும் இடத்தில் காவிரி ஆற்றில் கலந்து செல்லும் ஏற்கனவே மேட்டூர் அணையும் 100 அடியை நெருங்கியுள்ளது. மேட்டூர் அணை 120 அடி வரை தண்ணீர் தேக்க முடியும் கர்நாடகாவில் தொடர் மழை மேலும் நீடித்தால் நமது மேட்டூர் அணையும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படும்.

 

CNC

 


மொத்தத்தில் இவ்வருடம் விவசாயப் பணிக்கும் குடிநீருக்கும் எவ்வித பஞ்சமும் ஏற்படாது என விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்