தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியில் உள்ள ஆறு வைப்பாறு. 5400 சதுர கிலோ மீட்டர் அளவில் மணல் வளம் கொண்ட இந்த ஆற்றுபகுதி கரையோர கிராமங்களான நென்மேனி, ராசப்பட்டி, கீழ்நாட்டுகுறிச்சி, முத்தலாபுரம், நம்பியபுரம், அம்மன் கோவில்பட்டி, பூசனூர், விருசம்பட்டி ஆகிய இடங்களில் அரசு சார்பில் மணல் குவாரிகள் நடைபெற்றன. இதற்கிடையில் மணல் குவாரிகள் நடத்த நீதிமன்றம் தடை உத்தரவுக்கு பின் மணல் குவாரிகள் நிறுத்தப்பட்டன.
இருந்தாலும் மணல் மாபியா கும்பல்கள் உள்ளுர் அரசியல் வாதிகள், காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் உதவியோடு இரவு, பகலாக மணல்களை லாரி, லாரியாக அள்ளி கேரளா, கர்நாடக உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தனர். 80 சதவீத மணல் வளம் சுரண்டப்பட்ட நிலையில் மக்கள் விழித்து கொண்டு பல்வேறு இடங்களில் மணல் அள்ள எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் மணல் மாபியா கும்பலின் அட்டகாசம் சிறிது காலம் நின்றது. நாளடைவில், சில அரசியல்வாதிகளின் துணை மணல் கொள்ளையர்கள் மணல் வளத்தினை சுரண்டி விற்பதும், அரசு நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு வைப்பாற்றின் கரையோரத்தில் உள்ள கிராமங்களில் இருக்கும் விவசாய நிலங்களை மணல் கொள்ளை கும்பல் விலைக்கு வாங்கி "பண்ணைக்குட்டை" என்ற பெயரில் சில அரசு அதிகாரிகளின் துணையுடன் மணலை கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் சில காலம் மணல் மாபியா கும்பல் அமைதியாக இருந்தது. இந்தநிலையில் தற்போது விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் கரம்பை மண் போடுவதற்கு வசதியாக கிராமங்களில் உள்ள கண்மாய்களில் மண் எடுத்து கொள்ள அரசு அனுமதி கொடுத்தது. இதனை, மணல் மாபியா கும்பல்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டது. விவசாயி என்ற பெயரில் அனுமதி வாங்கி அரசு விதிமுறைகளை மீறி கண்மாய்களில் சரள் மணல்களை அள்ளி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
ஆரம்பத்தில் கரம்பை மண் அள்ளுவதாக நினைத்த மக்களும், விவசாயிகளும், மணல் அள்ளபடுவதை அறிந்து எதிர்க்க தொடங்கியுள்ளனர். இருந்தாலும் வருவாய்துறை அதிகாரிகளுடம் சேர்ந்த மணல் கொள்ளை கும்பல் மணல் வளத்தினை சுரண்ட ஆரம்பித்த காரணத்தினால் பொதுமக்களும், விவசாயிகளும் செய்வதறியமால் திகைத்த நிலையில் விளாத்திகுளம் அருகேயுள்ள வேடப்பட்டியில் கண்மாயில் சரல் மணல் அள்ளி காட்டுபகுதியில் குவித்து வைத்து அதிக விலைக்கு வெளியூர்களுக்கு விற்பனை செய்தறிந்து பொதுமக்களும், விவசாயிகளும் வாகனங்களை சிறைபிடித்து எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த மணல் மாபியா கும்பலுக்கு உள்ளூர் தாசில்தார் லெனின் உடந்தையாக இருப்பதாக அனைவரும் குற்றம் சாட்டிய நிலையில், மணல் கொள்ளை குறித்து நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி செல்லப்பா என்பவர் கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயாவிடம் செல்போனில் புகார் தெரிவிக்க, கோட்டாட்சியர், “தாசில்தார் லெனின் மீது பல்வேறு புகார்கள் வருவதாகவும், தினமும் மணல் மூலமாக சுமார் 2லட்ச ரூபாய் வரை சம்பாதித்து வருதாக தெரிவித்துள்ளார். இவர்கள் இருவர்களுக்கு இடையிலான ஆடியோ வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவ வருவாய் துறை அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.