ஒகேனக்கல் காவிரியில் நீர் வரத்து குறைந்ததை அடுத்து, பதினான்கு நாள்களுக்குப் பிறகு மீண்டும் பரிசல் இயக்க அனுமதித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த பத்து நாட்களாக கனத்த மழை பெய்து வந்தது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள கேஆர்எஸ், கபிணி அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கும், அங்கிருந்து மேட்டூர் அணைக்கும் வந்து கொண்டிருக்கிறது.
கடந்த ஜூலை 23ம் தேதியன்று நீர்வரத்து வினாடிக்கு 7500 கன அடியாக இருந்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஒகேனக்கல் காவிரியில் பரிசல் இயக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதன் பிறகு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், பரிசல் இயக்குவதற்கான தடையும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், அங்கிருந்து நீர்திறப்பும் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 4000 கனஅடியாக குறைந்துள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதி காலையிலும் நீர்வரத்து அதே நிலையில் இருந்தது.
இதையடுத்து, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மீண்டும் அனுமதி அளித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். பதினான்கு நாள்களுக்குப் பிறகு இன்றுமுதல் (ஆக. 6) மீண்டும் பரிசல் சவாரி பயணம் தொடங்கியிருப்பதால், சுற்றுலா பயணிகளும், பரிசல் ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து குறைந்துள்ளது. நேற்று ஆகஸ்ட் 6- ம் தேதி அணைக்கு வினாடிக்கு 5699 கன அடியாக நீர் வரத்து இருந்த நிலையில், ஆகஸ்ட் 6ம் தேதி 4171 கன அடியாக மேலும் சரிந்தது.
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடியாக நீர் திறந்து விடப்படுகிறது. எனினும் நீர்திறப்பைக் காட்டிலும் நீர்வரத்து அதிகமாக உள்ளதால், அணையின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆகஸ்ட் 6ம் தேதி நேற்று அணையின் நீர்மட்டம் 52.97 அடியாகவும், நீர் இருப்பு 19.73 டிஎம்சி ஆகவும் இருந்தது.